சென்னையில் இரு தபால் அலுவலகங்களில் குண்டு வீச்சு
பதிவு செய்த நாள் - அக்டோபர் 29, 2013, 8:32:08 AM
மாற்றம் செய்த நாள்- அக்டோபர் 29, 2013, 9:04:44 AM
சென்னையில் நேற்று நள்ளிரவு தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட விவகாரத்தில், இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாப்பூர், மந்தைவெளி தபால் நிலையங்களில், இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் பெட்ரோல் குண்டுகள் சரமாரியாக வீசியுள்ளனர். நள்ளிரவு 12 மணி முதல் 1.30 மணிக்குள் இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மயிலாப்பூர் தபால் நிலையத்தின் உள்ளே 5 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஜன்னல் கதவுகளை திறந்து பெட்ரோல் குண்டுகளை உள்ளே வீசியதில், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தானியங்கி முத்திரை ஒட்டும் எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.
பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் தபால் நிலையத்தில் ஏற்பட்ட லேசான தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். மந்தைவெளி தபால் நிலையத்தில் 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஆனால், இங்கு அதிகளவு சேதம் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு தபால் நிலையங்களில் இருந்தும் வெடிக்காத 4 பெட்ரோல் குண்டுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தை அடுத்து, மயிலாப்பூர், மந்தைவெளி ஆகியப் பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதையடுத்து, இரண்டு பேரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment