தமிழக இ-சேவை மையங்களில் இன்றுமுதல் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கலாம்
சென்னை: சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 339 இடங்களில் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில், 54 கோட்ட அலுவலகங்களை தவிர்த்து 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள் மற்றும் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என 285 இடங்களில் நிறுவப்பட்டுள்ள இ-சேவை மையங்களில் பாஸ்போர்ட் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
புதிதாக பாஸ்போர்ட் பெற விரும்புவோர், ஏற்கனவே வைத்துள்ள பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விரும்புவோர் மற்றும் தட்கல் முறையில் விண்ணப்பிக்க விரும்புவோர் இம்மையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இச்சேவை நாளை(இன்று) முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும். தமிழகத்தில் தற்போது 8 சேவா கேந்திரா மையங்கள் செயல்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் இறுதிக்குள் 9வது மினி சேவா கேந்திரா மையம் பாண்டிச்சேரியில் ஏற்படுத்தப்படும். சென்னை மண்டல அலுவலகத்தில் மட்டும் 4 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் குமரகுருபரன் உடன் இருந்தார்.
கட்டணம் எவ்வளவு
ரூ.1500 பாஸ்போர்ட், சேவை கட்டணம் ரூ.155 என மொத்தம் ரூ.1655 கட்டணமாக செலுத்தி இச்சேவையை பயன்படுத்தலாம். பாஸ்போர்ட் பெறுவதற்காக காவல்துறை மூலம் சோதனை செய்ய விண்ணப்பிப்பவரின் ஆவணங்கள் தற்போது பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து காவல்துறை அதிகாரிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இப்பணியை துரிதப்படுத்தும் வகையில் ஆன் லைனிலேயே அனைத்து ஆவணங்களையும் காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம், விண்ணப்பிப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் துரிதமாக கிடைக்க வாய்ப்புள்ளது.
0 comments:
Post a Comment