வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு பழைய காசோலைகள் செல்லாது. புதிய சி.டி.எஸ். காசோலைகள் மட்டும்தான் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
சி.டி.எஸ். காசோலை என்றால் என்ன? இதை ஏன் இப்போது கொண்டு வருகிறார்கள்? இந்த சி.டி.எஸ். காசோலையைப் பெறுவது எப்படி? என பலருக்கும் பலவித கேள்விகள் இருப்பதால் அந்த கேள்விகளை கார்ப்பரேஷன் வங்கியின் சேவைப் பிரிவின் தலைமை மேலாளர் எஸ்.சீனிவாசனிடம் கேட்டோம். தெளிவாக எடுத்துச் சொன்னார் அவர்.
''தற்போதுள்ள நடைமுறைப்படி, காசோலை களை சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனுப்புவதற்குப் பதிலாக அதனுடைய இமேஜை ஸ்கேன் செய்து, நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவிற்கு வங்கிகள் அனுப்புகின்றன. அங்கிருந்து அந்தந்த வங்கிகளுக்கு காசோலை களின் இமேஜ் அனுப்பப்படும். வங்கிகள் அந்த இமேஜை சரிபார்த்து, எந்த பிரச்னையும் இல்லையென்றால் வாடிக்கையாளரின் கணக்குக்குப் பணத்தை வரவு வைக்கும். ஏதாவது பிரச்னை என்றால் திரும்ப அனுப்பிவிடும். இந்த நடைமுறையைத்தான் கடந்த ஒரு வருடமாக வங்கிகள் பின்பற்றுகின்றன.
இப்படி செய்வதில் வங்கிகளுக்குப் பல சிக்கல். ஒவ்வொரு வங்கியின் காசோலையும் வித்தியாசமாக உள்ளது. தேதி, வாடிக்கையாளரின் கணக்கு எண், வங்கியின் பெயர், அடையாளச் சின்னம் என ஒவ்வொன்றும் ஓர் இடத்தில் இருக்கும். இதனால், காசோலைகளை சரிபார்க்க காலதாமதம் ஆகிறது. இந்த காலதாமதத்தைத் தீர்க்கத்தான் சி.டி.எஸ். காசோலைகளை நடை முறைப்படுத்த உள்ளது ரிசர்வ் வங்கி.
இந்த காசோலையில் தேதி, வாடிக்கையாளர் கணக்கு எண் எழுதுவதற்கு தனி கட்டங்கள் இருக்கும். சி.டி.எஸ். காசோலைகளை கலர் ஜெராக்ஸ் எடுக்கும்போது சாம்பல் நிறத்தில் உள்ள கட்டத்தில் வாய்டு (ஸ்ஷீவீபீ) என்று இருக்கும். இதை வைத்து போலிகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம். வங்கிகளில் காசோலை களின் இமேஜை ஸ்கேன் செய்யும்போதே போலிகளைக் கண்டுபிடித்துவிடலாம்.
புதிய சி.டி.எஸ். காசோலைகள் பெறும் வழிமுறைகள் சுலபமான வைதான். ஏற்கெனவே உள்ள காசோலைகளை வங்கிக் கிளை களில் ஒப்படைத்துவிட்டு, புதிய காசோலைகளை பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனிலும் விண்ணப்பித்து பெறலாம்.
ஏற்கெனவே முன்தேதி இட்ட காசோலைகளை யாருக்காவது தந்திருந்தீர்கள் என்றால் அவற்றைத் திரும்ப வாங்கி, அவர்களுக்குப் புதிய சி.டி.எஸ். காசோலைகளை வழங்குவது உங்களின் பொறுப்பு. கடந்த மாதம் நீங்கள் புதிய காசோலை வாங்கி இருந்தால் அது பெரும்பாலும் சி.டி.எஸ். காசோலையாகவே இருக்கும்.
சி.டி.எஸ். காசோலைகள் நடைமுறைக்கு வருவதன் மூலம் குறுகிய நேரத்தில் வாடிக்கை யாளர்கள் பணத்தைப் பெறமுடியும். வெளியூர் காசோலைகளுக்கு தனிக் கட்டணம் எதுவுமில்லை. இதெல்லாம் வாடிக்கையாளருக்குச் சாதகமான விஷயங்கள்.
அதே சமயம், முன்பெல்லாம் காசோலையில் எழுதும்போது தவறு ஏற்பட்டால் அதை அடித்துத் திருத்தலாம். ஆனால், இனி அடித்து எழுதும் காசோலைகளை வங்கி ஏற்காது'' என்கிற எச்சரிக்கையோடு முடித்தார் சீனிவாசன்.
நல்ல விஷயம், சீக்கிரமே வரட்டும்!
-
இரா.ரூபாவதி. படம். வீ.நாகமணி.
நன்றி நாணயம் விகடன்