...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, August 15, 2019

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
         உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய சுதந்திர தினவிழா வாழ்த்துக்கள்
               இந்திய சுதந்திர  போராட்டத்தில்   திருநெல்வேலி மாவட்டத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு .அந்த சிறப்பிற்கு உரியவர்கள் நம் தாய் நாட்டின் உரிமைக்காக இன்னுயிர் நீத்த   தியாகிகளை தலைவர்களை நாம் நினைவு கூறுவோம்   ஆம் .நம் மண்ணின் மைந்தர்களை நினைவுகூறுவோம் .
                                    வீர பாண்டிய கட்ட பொம்மன்
ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 1760 ஆம் ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் பிறந்தார்..வீரபாண்டிய கட்டபொம்மனது வீரமும், விவேகமும் சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவி, அவர்கள் மனதிலும் வீரவித்தை விதைத்தது. ஜாக்சன் துரைக்குப் பின்னர், லூஷிங்டன் என்பவர் கலெக்டராகப் பதவியேற்றார். ஆங்கிலேய ஆதிக்கத்தில், ஆங்கிலேயர்களுக்கு பேரிடைஞ்சலாகக் கருதப்பட்ட மைசூர் மன்னரான திப்பு சுல்தான் அவர்களை மே மாதம் 1799 ஆம் ஆண்டில், பீரங்கிகுக்குப் பலி கொடுத்தப் பின்னர், ஆங்கிலேயர்களின் இலக்குக் கட்டபொம்மனாக இருந்தது. அவருக்கும் பிரித்தானிய அரசு நிர்வாகிகளுக்கும் முரண்பாடு அதிகரித்ததால், செப்டம்பர் 1 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில், பானர்மென் என்பவர் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுத்தது. போருக்கு ஆயத்தமாகாமல் இருந்த போதிலும், கட்டபொம்மன் அவர்கள், ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கடுமையாக போராடினார். இந்தப் போரில், கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதால், கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னனிடம் அடைக்கலம் கோரினார். ஆங்கிலேயர்களுக்கு பயந்து, அவரைப் புதுக்கோட்டை மன்னன் காட்டி கொடுத்ததால், ஆங்கில நிர்வாகிகள் அவரைக் கைது செய்தனர்.
மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட “குற்றங்களை’ கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. மேலும் கம்பீரத்தோடு “எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையகாரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.
                                                 மாவீரன் வாஞ்சிநாதன் 
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன்.வாஞ்சி செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்ததும், திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.வரை படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே முன்னீர் பள்ளம் சீதாராமய்யாரின் மூத்த புதல்வியான பொன்னம்மாளை மணந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும், புனலூர் காட்டிலாகாவில் [2] பணியாற்றினார்.
 1911 ஜூன் 17 காலை 6:30 மணிக்கு மணியாச்சித் தொடருந்து சந்திப்பில், திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரை தனது மனைவியோடு கொடைக்கானலுக்குச் செல்ல வண்டியின் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தார். அந்நேரம் வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சி, புகைவண்டியில் அமர்ந்திருந்த கலெக்டர் ஆஷ் துரையைத் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு மரணம் அடைந்தார். இவரின் உடல் கங்கைகொண்டான் பாலத்திற்கு வரும் போது உயிர் பிரிந்தது, அதன் பின் இரண்டு நாட்கள் திருநெல்வேலி சந்திப்பு பாலம் காவல் நிலையத்தில் வைத்திருந்து பாளையங்கோட்டை மிலிடரி லைன் ஆங்கில சர்ச் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
வாஞ்சியின் பிரேத விசாரணையில், அவர் போட்டிருந்த உள்சட்டையில் இருந்த துண்டுக் கடிதத்தில் கலெக்டரைச் சுட்டுக் கொன்றதற்கான காரணமும், சென்னையில் 3,000-த்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தன்னுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டு ஆர். வாஞ்சி ஐயர், செங்கோட்டை என்றெழுதி இருந்தது.
                                    வ .உ .சிதம்பரம் பிள்ளை 
 வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.
தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. 1892- ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.
இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.40 ஆண்டு தீவாந்திரத் தண்டனை! யாருக்கும் கொடுக்கப்படாத கொடுமையான தண்டனை. ஆங்கில அரசுக்கு வ.உ.சி.யிடத்தில் அளவு கடந்த பயம். இந்தக் கொடுமையான தண்டனைக்கு அந்த பயமே காரணம். அவரைச் சிறையில் அடைத்தால்தான் அவர்களால் தொடர்ந்து இந்தியாவில் ஆட்சி செய்ய முடியும். வ.உ.சி.க்கு அப்பொழுது 36 வயது தான்.
                                         சுப்ரமணிய பாரதியார் 
சுப்ரமணிய பாரதியார் அவர்கள்,  சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
நன்றி வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 




                             

0 comments:

Post a Comment