அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் வட்டி குறைப்பு --வாடிக்கையாளர்களை வாட்டி வதைக்கிறதா ? எட்டி உதைக்கிறதா ?
அஞ்சலக சேமிப்பு வட்டிகளை 3 மாதத்திற்கொருமுறை சந்தைநிலவரத்தின் அடிப்படையில் மாற்றிக்கொள்ளலாம் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திருமதி சியாமளா கமிட்டி கடந்த 07.06.2011 அன்று கொடுத்த சிபார்சுகளின் அடிப்படையில் சேமிப்பு வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு நாலுமுறை (காலாண்டிற்கொருமுறை ) மாற்றிக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது .அன்றைய நிதியமைச்சர் திரு .பிரணாப் முகர்ஜி (UPA ) .மேலும் இந்த கமிட்டி தான் அஞ்சலக சேமிப்பு முகவர்களுக்கு கொடுக்கப்படும் ஊக்கத்தொகையையும் குறைத்திட பரிந்துரை செய்திருந்தது .
இந்த வட்டி குறைப்பினால் சேமிப்பு ஆர்வங்கள் பொதுமக்களிடம் குறைகிறதோ இல்லையோ அவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படும் எதார்த்தத்தை நாம் பார்க்க முடிகிறது .அதிலும் குறிப்பாக பொதுமக்களிடம் நேரடி தொடர்புடைய நமது அஞ்சல் ஊழியர்களால் இதை நன்றாக உணரமுடியும் .உதாரணமாக
1.மூத்த குடிமக்களின் வசதிக்காக கொண்டுவரப்பட்ட சீனியர் சிட்டிசன் திட்டம் 28.02.2004 யில் தொடங்கப்பட்ட போது வட்டி விகிதம் 9 சதம் .நடப்பில் இருந்தது 7.4 01.4.2021 முதல் 6.5 சதம் என குறைக்கப்பட்டுள்ளது
2.பெண்குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க என பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்டு தொடங்கப்பட்ட செல்வமகள் சேமிப்பு திட்டம் 02.02.2014 யில் அறிமுகப்படுத்தப்பட்ட போது கொடுக்கப்பட்ட வட்டி 9.10 சதம் நடப்பில் இருந்தது 7.6 01.4.2021 முதல் 6.9 சதம் மாதம் ஒன்றிற்கு ரூபாய் 1000 செலுத்தினால் 18 வயதில் 6 லட்சம் என விளம்பரப்படுத்தப்பட்ட திட்டம் இது .
3.வயதான மற்றும் முதியவர்களுக்கு ஓய்வூதியத்திற்கு நிகராக வழங்கப்படும் என 1987 யில் கொண்டுவரப்பட்ட மாதாந்திர சேமிப்பு திட்டம் ஆரம்பத்தில் 12 சதமாகவும் 1992-1993 களில் 14 சதமாக உயர்ந்த வட்டி நடப்பில் இருந்தது 6.6 01.4.2021 முதல் 5.7 சதம் என குறைக்கப்பட்டுள்ளது
4.அஞ்சலக தொடர் சேமிப்பு திட்டத்தில் 1971 களில் ரூபாய் 10 க்கு முதிர்வு தொகை 700 என்றும் பின்னர் 718 என உயர்ந்ததையும் இன்று நடப்பில் இருந்தது 5.8 01.4.2021 முதல் 5.3 சதம் என குறைக்கப்பட்டுள்ளது
5.TD கணக்குகள் கூட 10 சதம் வரை இருந்த வட்டி விகிதங்கள் இன்று 4.4 முதல் 5.8 என வெகுவாக குறைந்திருக்கிறது
6.இந்த வட்டி மாற்றத்தில் சாதாரண சேமிப்பு கணக்கு கூட தப்பவில்லை என்பது கூடுதல் கவலை
இப்படி அஞ்சலகத்தை மட்டுமே நம்பியிருக்கும் வாடிக்கையாளர்களை தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் நிதியமைச்சக மற்றும் RBI முடிவுகளை எதிர்த்து நாம் இயக்கங்களை நடத்தவேண்டியது காலத்தின் கட்டாயம் .அஞ்சல் துறையின் அடிப்படைகள் ஒவ்வொன்றாக தகர்ந்து கொண்டிருக்கும் போது இன்னமும் நிர்வாகம் ஆதார் கேம்ப் AEPS பரிவர்த்தனை கங்கா ஜெல் பலப்பல ஆலயங்களின் பிரசாதங்கள் என தற்காலிக வணிகங்களை தேடிஅலைவது இயற்கை முரண் ...
வாருங்கள் ! அஞ்சலக வாடிக்கையாளர்களை காப்போம் -அஞ்சல் துறையை பாது காப்போம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலாளர் நெல்லை
0 comments:
Post a Comment